தன்னுடைய வித்தியாசமான கதை களத்தினாலும், பிரம்மாண்ட தயாரிப்புகளாலும் இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய புகழை பெற்றவர் தான் இயக்குனர் ராஜ மௌலி. நான் ஈ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்த இவர், பாகுபலி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் இவர் வசம் கவர்ந்து விட்டார்.
பாகுபலியின் தாக்கம் சினிமாவிலிருந்து நீங்கும் முன்பே இவர் கொடுத்த அடுத்த அதிரடி தான் ஆர்ஆர்ஆர். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டது. இதற்கு மிக முக்கிய காரணமானவர்கள் ராஜ மௌலி திரைப்படங்களின் முந்தைய கதாநாயகர்களான ராம் சரண் தேஜாவும், ஜூனியர் என்டிஆரும் தான்.
ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் ஷ்ரேயா சரண் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆன திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர். இந்த படம் இயக்குனர் ராஜ மௌலிக்கு பல மடங்கு பெயரையும், புகழையும் வாரி கொடுத்தது. 550 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக 1200 கோடி வசூலித்தது.
இப்போது இந்த படம் ராஜ மௌலிக்கு மற்றுமொரு அந்தஸ்தையும் வாரி கொடுத்திருக்கிறது. எம்.எம்.கீரவாணி இசையில் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பட்டையை கிளப்பிய பாட்டு தான் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு. இப்போது இந்த பாட்டுக்கு தான் கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற விருது விழாவில் படக்குழுவினர் இந்த விருதை பெற்று கொண்டனர்.
உலக அளவில் உயரிய விருதினை பெற்றுள்ளதால், இந்தியாவிற்கே ஒரு பெருமையை சேர்த்திருக்கிறது. கோல்டன் குளோப் விருது பெற்றதற்காக பலதரப்பட்ட மக்களும் ஆர்ஆர்ஆர் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். இதுமட்டுமின்றி ஆர்ஆர்ஆர் திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே.
மேலும் இந்த நாட்டு நாட்டு பாடலும் ஒரிஜினல் பாடல்கள் பிரிவில் ஆஸ்காருக்காக நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பாக இந்தி படமான ஸ்லம் டாக் மில்லினருக்கு இப்படி ஒரு அங்கீகாரம் உலக அரங்கில் கிடைத்தது. தற்போது ராஜ மௌலியின் படமான ஆர்ஆர்ஆர் க்கும் இப்படி ஒரு பெருமை கிடைத்து இருக்கிறது.