2008 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்த குருவி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தது தான் ரெட் ஜெயண்ட் சினிமா நிறுவனம். தயாரிப்பு நிறுவனமாக தங்களுடைய கலைப்பயணத்தை தொடங்கிய ரெட் ஜெயண்ட் நிறுவனம் சினிமா விநியோகஸ்தர்களாகவும் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். நடிகர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது வரை இந்த நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
அண்மையில் பல சூப்பர் ஹிட் படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வாங்கி தமிழகம் முழுவதும் விநியோகித்து வருகிறது. உதயநிதி ஸ்டாலின் அரசியல் பின்புலம் கொண்டவர் என்பதால் அவர் சினிமா தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் மிரட்டி படத்தை வாங்குகிறார் என்று வதந்திகள் கூட வெளிவர ஆரம்பித்தன. பொது மக்களும் கூட இதை நம்பினர்.
ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் விநியோகஸ்தர்கள் என்ன கணக்கு கொடுக்கிறார்களோ அதை வைத்து தான் படத்தின் லாப நஷ்டங்கள் தெரியும். அப்போது இருந்த விநியோகஸ்தர்கள் கணக்கு வழக்குகளில் பல குளறுபடிகளை செய்து வந்தனர். இது வெளியில் வராமலேயே இருந்தது.
இந்த கணக்கு குளறுபடிகளால் ஒரு படத்தின் லாப நஷ்ட கணக்குகளை கணக்கிட முடியாமல் எல்லோரும் நஷ்டப்பட்டு தான் வந்தனர். இப்படி ஒரு மிகப்பெரிய மாபியா கும்பலிடம் தான் தமிழ் சினிமா சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தலை தூக்கி வந்தது தான் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் சினிமா நிறுவனம்.
இந்த நிறுவனம் தாங்கள் விநியோகிக்கும் படங்களின் லாப நஷ்ட கணக்குகளை தெள்ளத் தெளிவாக வைத்திருக்கிறார்கள். அதேபோல் உதயநிதியை பொருத்தவரைக்கும் ஒரு படத்தின் லாபம் எவ்வளவு, நஷ்டம் எவ்வளவு என்பதை எந்த மேடையிலும் அவர் வெளிப்படையாக சொல்ல தயங்கியதே இல்லை.
இதனால்தான் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் நான் நீ என்று போட்டுக் கொண்டு ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் படத்தை கொடுக்கிறார்கள். இது பிடிக்காத விஷமிகள் தான் தேவையில்லாத விமர்சனங்களை அந்த நிறுவனத்தின் மீது பரப்பி வருகின்றனர். உண்மையில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ் சினிமாவை வேற லெவலுக்கு கொண்டு சென்று இருக்கிறது.