பழைய ரூட்டுக்கே திரும்பிய சத்யராஜ்.. மிரள வைக்க வரும் அவதாரம்

சத்யராஜ் இப்போது தமிழில் படு பிஸியான நடிகராக மாறி இருக்கிறார். அவர் இல்லாமல் எந்த ஒரு படங்களும் வராது என்ற அளவுக்கு அவர் சுத்தி சுத்தி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த வருடம் வெளிவந்த பிரின்ஸ், லவ் டுடே, கனெக்ட் உள்ளிட்ட படங்களின் மூலம் பாராட்டுகளை பெற்ற சத்யராஜ் இப்போது தன்னுடைய பழைய ரூட்டுக்கு மாறி இருக்கிறார்.

அதாவது அவர் ஆரம்ப காலத்தில் வில்லனாகத்தான் நடித்து வந்தார். அதன் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஹீரோ கதாபாத்திரங்கள் செய்ய ஆரம்பித்தார். நக்கலும், நையாண்டியும் கலந்து நடிக்கும் அவருடைய நடிப்பு ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்தது. அதனாலேயே அவர் அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு சென்றார்.

பெரிய ஹீரோவான பிறகு அவர் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை. ஒரு கட்டத்திற்கு பிறகு அவர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதில் சில திரைப்படங்களில் அவருடைய கதாபாத்திரம் நெகட்டிவ் கேரக்டர் போல் நடித்திருந்தாலும் அதில் நகைச்சுவையும் கலந்து தான் இருந்தது.

அந்த வகையில் அவர் இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு குணச்சித்திர நடிகராக மாறிவிடுகிறார். அந்த அளவுக்கு அவர் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுக்கு அப்பாவாக நடித்து வருகிறார். அதிலும் இந்த வருடம் வெளிவந்த வீட்ல விசேஷம் திரைப்படத்தில் அவரின் நடிப்பு பயங்கர கலாட்டாவாக இருந்தது.

அதைத்தொடர்ந்து அவர் இப்போது ஒரு படத்தில் முழுக்க முழுக்க வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். மோகன் இயக்கும் அங்காரகன் என்ற படத்தில் தான் சத்யராஜ் வில்லனாக நடித்து வருகிறார். அதில் அவர் வில்லத்தனம் கலந்த போலீசாக நடித்து கொண்டிருக்கிறார். அவருடன் இணைந்து ஸ்ரீபதி, நியா, அங்காடி தெரு மகேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு சத்யராஜுக்கு அடுத்தடுத்து வில்லன் வாய்ப்புகளே குவிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் இந்த படத்தில் படு மிரட்டலாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.