சங்கர் மீது பல தயாரிப்பாளர்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள் என்பது அவரது அந்நியன் பட ரீமேக் அறிவிப்பின் போது தான் அனைவருக்கும் தெரியவந்தது. பல தயாரிப்பாளர்கள் அவரை கட்டம் கட்டியது கோலிவுட்டுக்கே அதிர்ச்சிதான்.
தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்துச் சென்ற இயக்குனர்களில் மிக முக்கிய இடம் பெற்றிருப்பவர் சங்கர். பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ஷங்கரின் படங்கள் எப்போதுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியதில்லை.
ஆனால் ஷங்கரின் ஆஸ்தான எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மறைவிற்கு பிறகு வெளியான ஷங்கரின் படங்கள் அனைத்துமே இது சங்கர் படமா என யோசிக்க வைக்கும் அளவுக்கு தரமில்லாமல் வந்து கொண்டிருக்கிறது. எப்போதுமே ஷங்கருக்கு ஒரு முதுகெலும்பாக இருந்தவர்தான் எழுத்தாளர் சுஜாதா.
இந்நிலையில் ஷங்கர் தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் படமான அந்நியன் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப் போவதாகவும், அதில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாகவும் அறிவிப்பை வெளியிட்டார். அறிவிப்பு வெளியான உடனே லைகா நிறுவனம் சங்கர் மீது இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் அந்நியன் ரீமேக்கை இயக்க கூடாது என ஒருபக்கம் அணை கட்டியது.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் அந்நியன் படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தின் மொத்த உரிமையையும் என்னிடம் தான் உள்ளது என இன்னொரு பக்கம் குடைச்சல் கொடுத்தார். இதனால் டென்ஷனான சங்கர் தன் பங்குக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மறைந்த சுஜாதாவின் பெயரை இழுத்து குற்றம்சாட்டியிருந்த தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுஜாதா எழுத்தாளராக மட்டும்தான் அந்நியன் படத்தில் பணியாற்றினார் எனவும் மற்றபடி கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்துமே என்னிடம் தான் உள்ளது எனவும் சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் என்னுடைய கற்பனையை படமாக்க எனக்கு முழு உரிமை உள்ளது எனவும், அந்நியன் படத்தில் நல்ல லாபம் சம்பாதித்து விட்டு இப்போது குற்றம் சாட்டுவது சரி இல்லை என தன்னுடைய அமைதியான பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் சங்கர்.
