தயவு செய்து வதந்தி பரப்பாதீங்க.. கடுப்பான சிம்பு பட இயக்குனர்.

பல சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது நடிகர் சிம்பு படங்களை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

ஏற்கனவே சிம்பு, வெங்கட்பிரபு இணைந்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மங்காத்தா அளவிற்கு மாஸான படத்தை கொடுக்கப்போகிறேன் என இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்ததில் இருந்தே சிம்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

சுரேஷ் காமாட்சி பெரும் பொருட் செலவில் படத்தை தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 10ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நடிகர் சிம்பு படக்குழுவினருடன் கேக் வெட்டி பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்ந்தார்.

அதுமட்டுமின்றி இயக்குனர் வெங்கட் பிரபு உட்பட மாநாடு படத்தில் பணியாற்றிய சுமார் 300 பேருக்கு விலை உயர்ந்த வாட்ச்சை சிம்பு பரிசளித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை கைப்பற்ற சில ஓடிடி தளங்கள் முயற்சி செய்தன.

ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கண்டிப்பாக படம் திரையரங்கில் தான் வெளியாகும் என தெரிவித்தார். ​ மாநாடு படத்திற்காக சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு இடையே சம்பள விவகாரத்தில் சிக்கல் வெடித்ததாகவும், அதனால் மாநாடு படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனால் கடுப்பான இயக்குநர் வெங்கட் பிரபு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், யப்பா சாமி.. ஏன்,ஏன்,ஏன்?… தயவு செஞ்சி வதந்தி பரப்பாதீங்க. மாநாடு பட வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நிம்மதியா வேலை செய்ய விடுங்கள் என செம்ம கடுப்புடன் பதிவிட்டுள்ளார்.