சூப்பர் ஹிட் மலையாள பட ரீமேக்கில் களமிறக்கும் சிம்பு.. அனல் பரக்க வெளிவந்த அப்டேட்

பல பிரச்சனைகளை கடந்து நடிகர் சிம்பு தற்போது தான் தனக்கு தகுந்த நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன் வெளிப்பாடு தான் கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியாகி நூறு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த மாநாடு படம். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு மிகவும் கவனமாக இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர கொரோனா குமார், பத்து தல, மஹா ஆகிய படங்கள் சிம்பு கைவசம் உள்ளன.

இந்நிலையில் சிம்பு அடுத்ததாக மலையாள படத்தின் ரீமேக் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் மற்றும் சுராஜ் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற டிரைவிங் லைசென்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் சிம்பு நடிக்க உள்ளாராம்.

ஒரு ஹீரோவை கடவுளுக்கு நிகராக மதிக்கும் தீவிர ரசிகன் அந்த ஹீரோவின் உண்மை முகம் தெரிந்த பின்னர் எப்படி மாறுகிறான் என்பது தான் டிரைவிங் லைசென்ஸ் படத்தின் கதை. இதில் பிருத்விராஜ் மற்றும் சுராஜ் ஆகிய இருவரும் தங்களின் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.

தற்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு மட்டுமல்ல மாநாடு படத்தின் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பிய எஸ்ஜே சூர்யாவும் இணைந்து நடிக்க உள்ளாராம். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்கெட்ச், வாலு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் சந்தர் தான் இந்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமல்ல இந்த படத்தை பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் அவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாநாடு படத்தில் இவர்கள் இருவரின் காம்போ அட்டகாசமாக இருந்த நிலையில் மீண்டும் இவர்களை ஒரே படத்தில் பார்க்க உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.