டாக்டர், டான் திரைப்படங்களின் மூலம் அடுத்தடுத்த வெற்றியை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. முதல் முறையாக பண்டிகை காலத்தில் வெளியாகி இருக்கும் அவருடைய திரைப்படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் வெளியாகி உள்ள இந்த படம் எப்படி இருக்கிறது என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தெலுங்கில் ஜதி ரத்னலு என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த அனுதீப் இப்படத்தை இயக்கியுள்ளார். காமெடி கலாட்டாவாக வெளிவந்துள்ள இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரேம்ஜி அமரன், சத்யராஜ், வெளிநாட்டு நடிகை மரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் வழக்கம் போல இயக்குனர் இந்த திரைப்படத்திலும் காமெடியின் மூலம் ஸ்கோர் செய்திருப்பதாகவும், டாக்டர் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் இந்த புது முயற்சி ஒர்க் அவுட் ஆகியுள்ளதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படத்தின் முதல் பாதி எதிர்பார்த்த அளவு காமெடியாக இருந்தாலும் இரண்டாம் பாதி ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது. அதிலும் சூரி, ஆனந்தராஜ் வரும் காட்சிகள் பயங்கர அலப்பறையாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
இயக்குனரின் முந்தைய படத்தில் வரும் கோர்ட் காட்சி எந்த அளவுக்கு ரசிக்கப்பட்டதோ அதேபோன்று இந்த படத்திலும் கிளைமாக்ஸ் காட்சி ரசிக்கும் வகையில் இருப்பதாகவும், அனுதீப்பின் ஹியூமர் சிவகார்த்திகேயனுடன் நன்றாகவே பொருந்தி இருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஆக மொத்தம் சிவகார்த்திகேயன் மற்றும் அனுதீப்பின் கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்த திரைப்படத்திற்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
