Captain Vijayakanth: உள்ளத்தில் நல்ல உள்ளம் எப்போதுமே உறங்காது என்ற வார்த்தை கேப்டன் விஜயகாந்த் தான் பொருந்தும். ஒரு நடிகன், கட்சியின் தலைவர் இறந்ததற்கு இரண்டே நாளில் ஒரு இடத்தில் 15 லட்சம் பேர் கூடி அவருக்கு பிரியாவிடை கொடுத்திருக்கிறார்கள் என்றால் அந்த மனிதன் மக்களின் மனதில் கருணை உள்ளம் கொண்டவனாக சிம்மாசனம் போட்டமர்ந்தது தான் காரணம்.
விஜயகாந்தின் இறுதி அஞ்சலிக்கு வந்திருந்த பிரபலங்கள் அத்தனை பேருமே அவரால் தங்களுக்கு கிடைத்த உதவியை பற்றி பெருமையாக பேசி இருந்தார்கள். அவர் இல்லை என்றால் நான் இன்று உயிரோடு இருந்திருக்க மாட்டேன், என் மகள் படித்திருக்க மாட்டாள், எனக்கு லட்சத்தில் சம்பளம் கொடுத்தார் என மனதார அவர் செய்த நன்றியை வெளியில் பேசினார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் பொழுது தான் உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, விஜயகாந்த் ஒரு ஆளாக நின்று மருத்துவமனையை சுற்றி இருந்த கூட்டத்தை கலைத்தது பற்றி பேசி இருந்தார். இது ரஜினிக்கு மட்டுமல்ல, எத்தனையோ சினிமா கலைஞர்களின் இன்னல்கள் நிறைந்த தருணத்தில் கேப்டன் தெய்வமாக நின்று உதவியிருக்கிறார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் இறந்த போது கேப்டன் விஜயகாந்த் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர். தானாக முன்வந்து சிவாஜியின் இறுதி அஞ்சலிக்கான செலவு மொத்தத்தையும் நடிகர் சங்கம் தரப்பில் ஏற்றுக் கொண்டார். அத்தனை நடிகர்களையும் ஒரே இடத்தில் கூட்டி, இடுகாடு வரை கூட்டத்தை அடக்கி, மொத்த நடிகர்களின் பேரணியில் சிவாஜியை வழி அனுப்பி வைத்தார்.
கண்டு கொள்ளாத நடிகர் சங்கம்
அப்படிப்பட்ட விஜயகாந்துக்கு இப்போது இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ன செய்தது என்று கேட்டால் ஒன்றுமே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. சினிமா கலைஞர்கள் அவர் செய்த நன்றியை எண்ணி நாளா பக்கத்திலும் இருந்து வந்து அவருக்காக கண்ணீர் விட்டார்களே தவிர, ஒட்டுமொத்த நடிகர் சேர்ந்து கேப்டனுக்காக, எங்கள் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருக்காக நாங்கள் இதை செய்கிறோம் என்று சொல்ல ஆள் இல்லை.
தமிழக அரசு தன்னுடைய சார்பில் விஜயகாந்தின் நல்லடக்கத்தை சிறப்பாக செய்து முடித்தது. சென்னை மாநகராட்சி கூட நேற்று விஜயகாந்தின் இறுதி அஞ்சலிக்கு உபயோகப்படுத்தப்பட்ட பூக்களின் செலவை ஏற்றுக்கொண்டது. தென்னிந்திய நடிகர் சங்கம், அதன் தலைவர், செயலாளர், பொருளாளர் கையைக் கட்டிக் கொண்டு யாருக்கோ இறுதி அஞ்சலி நடக்கிறது என வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது மட்டமான வேலை.