சினிமாவைப் பொறுத்தவரை ஒரு மொழியில் எடுக்கப்படும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றால், உடனே அந்த படத்தை வேறொரு மொழியில் ரீமேக் செய்வது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் சமீபகாலமாக ரீமேக் செய்யப்படும் தமிழ் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வேறு மொழிகளில் ஹிட்டான படங்களை தமிழில் ரீமேக் செய்யும் காலம் மருவி தற்போது தமிழ் படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் காலம் வந்துள்ளது. ஒரே சமயத்தில் 12 தமிழ் படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மைதான் சமீப காலமாக தமிழில் ஹிட்டான படங்கள், ஹிந்தியில் ரீமேக்காவது அதிகரித்துள்ளது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி ஓடிடியில் வெளியான சூரரைப் போற்று படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப் படுவதாக நடிகர் சூர்யா சமீபத்தில் அறிவித்திருந்தார். அதேபோல் நடிகர் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படமும் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.
மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான மாநகரம் படத்தையும் சந்தோஷ் சிவன் இந்தியில் ரீமேக் செய்கிறார். மும்பைகர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விக்ராந்த் மாசே ஹீரோவாக நடிக்கிறார்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற கோலமாவு கோகிலா படம், குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் நயன்தாரா கேரக்டரில் ஜான்வி கபூர் நடிக்கிறார்.
அதேபோல் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ஆரண்ய காண்டம், விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா, அருண் விஜய் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய தடம், ஷங்கர் இயக்கிய அந்நியன், அஜித்தின் வீரம், வேதாளம் ஆகிய படங்களும் ஹிந்தியில் ரீமேக் ஆகின்றன.

சித்தார்த், பாபி சிம்ஹா நடித்த ஜிகர்தண்டா படம், பச்சன் பாண்டே என்ற பெயரில் ரீமேக் ஆகி இருக்கிறது. தொடர்ந்து அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய்சேதுபதி நடித்து தமிழில் வரவேற்பை பெற்ற, ஓ மை கடவுளே படமும் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவே ஹிந்தியிலும் இயக்குகிறார்.
இதைத் தவிர இன்னும் சில படங்களின் ரீமேக் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தமிழ் படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவது தமிழ் படங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதப்படுகிறது.