நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் சென்னை மற்றும் காஷ்மீரில் நடைபெற்றது. தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கப்பட்டிருக்கிறது. லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோவாக தற்போது தளபதி விஜய் இருக்கிறார். சினிமாவை தாண்டி விஜய்க்கு அரசியலில் சாதிக்க வேண்டும் என்பதும் விருப்பமாக இருக்கிறது. ஆனால் இதுவரையிலும் தன்னுடைய நேரடியான பங்கு எதையும் அவர் அரசியலில் செய்யவில்லை. இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய நிர்வாகிகளை வைத்து ஆழம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.
இவர் வரும் 2026 ஆம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க ஆயத்தமாகி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் அரசியலில் இன்று பழம் தின்று கொட்டை போட்ட அனுபவமுள்ள ஒரு முக்கிய அரசியல்வாதி விஜய் உடன் இருக்கிறார் என்றும் அவர் அடுத்தடுத்து என்ன செய்யலாம் என்பதை விஜய்க்கு அறிவுறுத்தி வருவதாகவும் கூட செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வருடங்கள் இருப்பதால் அதற்குள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு வருகிறார் தளபதி விஜய். இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் மக்கள் இயக்கம் கட்சியைச் சார்ந்த யாரும் வெளியில் போய் விடக்கூடாது என்பதில் ரொம்பவும் உறுதியாக இருக்கிறார் இவர். அதற்கான திட்டங்களை தான் இப்போது செய்து வருகிறார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகளை வீட்டிற்கு அழைத்து இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை அவர்களுடன் செலவிடுகிறார் நடிகர் விஜய். அவர்களுடன் உணவு உண்பது, அவர்களுக்கு தேவையானவற்றை செய்வது என நன்றாக கவனித்துக் கொள்கிறார். இதன் மூலம் அவர்கள் மக்கள் இயக்கத்தில் இருந்து வெளியில் போகாத அளவிற்கு முட்டுக்கட்டை போட்டு வைத்திருக்கிறார்.
ஆனால் இதுவரைக்கும் தளபதி விஜய் தான் அரசியலில் இறங்கப் போவதாக வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. இவர் அரசியலில் இறங்கினால் அவருடைய வெற்றி பாதை எப்படி இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. தமிழகத்தை பொறுத்தவரைக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை தவிர சினிமாவிலிருந்து வந்தவர்கள் பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை. விஜய்க்கு அரசியல் சாதகமாக இருக்குமா என்பது இனிவரும் காலங்களில் தான் தெரியும்.