மனோபாலா-வை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய நடிகர்.. இயக்குனராக வாய்ப்பு கொடுத்த பாரதிராஜா

மனோபாலா வுக்கு சினிமா மேல் இருந்த அளவு கடந்த பற்றால் சிறு வயதில் இருந்தே ஒரு படத்தையும் விடாமல் அனைத்தையும் பார்த்து வந்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் அந்த படங்களை பார்த்து அதற்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் கதைகளை மாற்றி இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்படி நடித்தால் வேற மாதிரி இருந்திருக்கும் என்று அவருடைய பாணியில் தானாகவே சொல்லிக் கொண்டு மனதில் சினிமாவைப் பற்றி ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதனால் எப்படியாவது சினிமாவில் ஒரு சின்ன வாய்ப்பு வாங்கி விடனும் என்று நினைத்திருக்கிறார்.

அந்த காரணத்தினால் வீட்டில் சினிமாவில் வாய்ப்பு தேடி போகிறேன் என்று சொன்னால் விட மாட்டார்கள் அதனால் சென்னையில் போய் நான் மேற்படிப்பு படிக்கப் போகிறேன் என்று பொய் சொல்லி சென்னைக்கு வந்திருக்கிறார். பிறகு சென்னையில் இருக்கும் ஒரு தியேட்டரையும் விடாமல் அனைத்து படங்களையும் பார்ப்பதே வேலையாக வைத்திருக்கிறார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் நடிகர் கமலை சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது.

அந்த சந்திப்பில் இவர்கள் இருவருக்கும் நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நட்பு நீடித்துக் கொண்டே போகும்பொழுது கமல், மனோபாலாவிடம் இருக்கும் சினிமா அறிவை கண்டு மிகவும் வியந்திருக்கிறார். அதன் பின் இவருடைய திறமை இப்படியே இருந்து விடக் கூடாது என்பதற்காக அடுத்த கட்டத்தை நோக்கி போக வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜாவிடம் அழைத்து சென்றிருக்கிறார்.

பாரதிராஜாவும், கமல் சொன்ன ஒரு வார்த்தைக்காக மனோபாலாவை உதவி இயக்குனராக வைத்துக்கொண்டார். அதிலிருந்தே மனோபாலாவின் வாழ்க்கை வேற லெவல்ல மாறியது. பாரதிராஜா இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த கிழக்கே போகும் ரயில் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இதன் பிறகு 1979ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதிய வார்ப்புகள் படத்தில் நடிக்கவும் ஒரு வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய சில படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அடுத்ததாக 1982 ஆம் ஆண்டு ஆகாய கங்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பிறகு அவர் இயக்கிய படங்களில் ஆகாய கங்கை, பிள்ளை நிலா, ஊர்க்காவலன், என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், மல்லுவேட்டி மைனர், முற்றுகை என தொடர்ந்து 20 படங்களுக்கும் மேலாக இயக்கியிருக்கிறார்.

அத்துடன் பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், காமெடியனாகவும் நடித்து பன்முகத் திறமைகளை கொண்ட ஒருவர் என்று நிரூபித்துக் காட்டி விட்டார். அத்துடன் சினிமா துறையில் 48 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் “தி லயன் கிங்” என்ற படத்தின் தமிழ் பதிப்பிற்கு டப்பிங் செய்துள்ளார். இப்படிப்பட்ட இவரை சினிமாவிற்கு அறிமுகம் செய்த பெருமை உலக நாயகன் கமல் அவருக்கு உரியதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.