பல வருடங்களாக ரஜினி, கமல் இருவரும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்துள்ளனர். தற்போது இளம் நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும் இவர்களுக்கான கெத்து மட்டும் குறையவில்லை. அதேபோன்று 80, 90 காலகட்டத்திலும் இவர்கள் நம்பர் ஒன் ஹீரோக்களாக இருந்தார்கள்.
அப்போது விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் போன்ற பல நடிகர்கள் போட்டியில் இருந்தாலும் சம்பள விஷயத்தில் ரஜினி, கமல் இருவரும் தான் முன்னிலையில் இருந்தார்கள். அந்த வகையில் கமல் 90 காலகட்டத்தில் ஒரு படத்திற்காக 50 லட்சம் வரை சம்பளமாக பெற்றிருக்கிறார். அதேபோல் ரஜினியும் ஒரு படத்திற்காக 70 லட்சம் வரை சம்பளமாக வாங்கி இருக்கிறார்.
இப்பொழுது ஒன்றிரண்டு ஹிட் கொடுத்து விட்டாலே நடிகர்கள் தங்கள் சம்பளத்தை தாறுமாறாக ஏற்றி விடுகிறார்கள். அதிலும் டாப் ஹீரோக்களாக இருப்பவர்கள் 100 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றனர். ஆனால் 30 வருடங்களுக்கு முன்பு ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்பது பெரிய விஷயம் தான். அந்த வகையில் ரஜினி, கமலை ஓரம் கட்டி ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ஒரு நடிகரும் இருந்திருக்கிறார்.
ஒரு தயாரிப்பாளராக அறிமுகமாகி ஹீரோவாகவும் பட்டையை கிளப்பிய ராஜ்கிரண் தான் அந்த பெருமைக்குரியவர். என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கிய இவர் மாணிக்கம் என்ற திரைப்படத்தில் நடித்த போது ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பெற்று இருக்கிறார். இது அந்த காலகட்டத்தில் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
அந்த அளவுக்கு ஒரு மாஸ் ஹீரோவாக இருந்த இவர் 10 படங்களிலேயே ஹீரோ அந்தஸ்திலிருந்து குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு மாறினார். அதாவது 1998 ஆம் ஆண்டு இவர் வீரத்தாலாட்டு என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு சில வருடங்கள் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அந்த இடைவெளியில் கமல் ரஜினி இருவரும் வேற ஒரு லெவலுக்கு சென்று விட்டார்கள்.
அதைத்தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த நந்தா திரைப்படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். திடீரென அவர் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது பலருக்கும் ஆச்சரியத்தை தான் கொடுத்தது. அதை தொடர்ந்து அப்பா போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு சண்டை கோழி, முனி போன்ற திரைப்படங்கள் நல்ல அடையாளமாக மாறியது குறிப்பிடத்தக்கது.