வைகைப்புயல் வடிவேலு கடந்த 10 ஆண்டுகள் முன்பு வரை தமிழ் சினிமா நகைச்சுவை உலகின் முடி சூடா மன்னனாக வலம் வந்து கொண்டிருந்தார். இவருடைய காமெடிக்காகவே பல படங்களும் வெற்றி பெற்றன. உச்ச நட்சத்திரங்கள் கூட தங்களுடைய படங்களில் இவரை நடிக்க வைக்க கால்ஷீட்க்காக தவம் கிடந்த நாட்களும் உண்டு. அந்த அளவுக்கு கொடிகட்டி பறந்தார்.
சினிமாவில் பேரும் புகழும் கணக்கில் அடங்காமல் இருந்த வேளையில், யானை தன் தலையிலே மண்ணை வாரி போட்டுக் கொண்ட கதையாக தேவையில்லாத பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளால் ஒட்டுமொத்தமாக சினிமாவில் இருந்தே ஒதுக்கப்பட்டார் வடிவேலு என்று தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக எந்த ஒரு பட வாய்ப்புமே இல்லாமல் இருந்தார்.
இவர் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் இவருடைய நகைச்சுவை ஒவ்வொரு தமிழ் ரசிகர்களின் மனதை விட்டும் நீங்காமல் தான் இருந்தது. ஒட்டுமொத்த சமூக வலைத்தளத்தையும் இவருடைய மீம்ஸ்கள் தான் ஆக்கிரமித்து இருந்தன. இவர் நடித்த காலத்தை விட நடிக்காமல் இருந்த காலத்தில் அதிக அளவு தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இது வடிவேலுவுக்கே ஆச்சரியத்தை கொடுத்தது.
சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த வடிவேலு இந்த மீம்ஸ்களை மட்டுமே நம்பி தனக்கு இன்னும் அதே வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கையில் கொஞ்சம் ஓவராக அலப்பறையில் ஈடுபட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் கடைசியில் இவர் நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் நல்ல கதை மற்றும் நடிப்பை மட்டுமே ரசிகர்கள் வரவேற்பார்கள் என்பதை அவருக்கு பாடமாக சொல்லிக் கொடுத்து விட்டது.
இவரை நடிக்க வைப்பதே மிகப்பெரிய கஷ்டமாக இருந்து வந்த நேரத்தில் சமீபத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் ஒட்டுமொத்தமாக சரண்டர் ஆகி எந்த பிரச்சினையும் இல்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார் வடிவேலு. இதற்கு மிக முக்கிய காரணம் வடிவேலு மீது இருந்த நடிகை சங்க பிரச்சனைகளை பஞ்சாயத்து பண்ணி தீர்த்து வைத்தது உதயநிதி ஸ்டாலின் தான்.
அதனால்தான் அவருடைய படத்தில் ரொம்பவும் ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார் வடிவேலு. மேலும் உதயநிதி ஸ்டாலின் இதுதான் தன்னுடைய கடைசி படம் என்று சொல்லிவிட்டார். எனவே இந்த படத்தில் ஒழுங்காக நடித்துக் கொடுத்து அவரை கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதுதான் வடிவேலின் திட்டம். மேலும் இந்த படத்தில் வடிவேலுவுக்கு வெயிட்டான கதாபாத்திரமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.