ரசிகர்களை ஏப்ரல் ஃபூல் ஆக்கிய வெங்கட் பிரபு.. மன்மதலீலையால் அதிருப்தி

மாநாடு திரைப்படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மத லீலை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த படத்தை காண்பதற்கு ரசிகர்கள் பலரும் டிக்கெட் புக் செய்து ஆவலுடன் காத்திருந்தனர்.

இளைஞர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலர், வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இருந்தது.

இதனால் இந்தப் படத்தின் முதல் காட்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் அவர்களை ஏமாற்றும் வகையில் இன்று வெளியாக இருந்த மன்மத லீலை திரைப்படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் சில தொழில்நுட்ப கோளாறுகளால் படத்தின் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மேட்னி காட்சி ஒளிபரப்பாகும் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மதிய காட்சிகளை காண இருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.

மதியம் 2 மணிக்கு காட்சிகள் ஒளிபரப்பாகும் என்று நினைத்த வேளையில் தற்போது இந்த காட்சியும் ஒளிபரப்பாகவில்லை. இதே போன்றுதான் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு திரைப்படமும் பல பிரச்சனைகளை சந்தித்து ஒருவழியாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது மன்மதலீலை திரைப்படத்திற்கும் இதே போன்றதொரு நிகழ்வு ஏற்பட்டு இருப்பதால் வெங்கட்பிரபுவின் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். மேலும் ஏப்ரல் முதல் தினமான இன்று வெங்கட்பிரபு ரசிகர்களை ஏமாற்றி விட்டதாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எது எப்படி இருந்தாலும் இன்று மாலைக்குள் அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிக்கெட் புக் பண்ணிய ரசிகர்கள் பதட்டப்பட வேண்டாம் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.