சிவாஜியின் இறுதி நாட்களில் அவரை சந்தித்த பத்மினி.. நடிகர் திலகத்தின் நிலையைப் பார்த்து கண்ணீர் விட்ட நாட்டிய பேரொளி

Sivaji Ganesan: நோய், முதுமை மற்றும் மரணத்திற்கு நல்லவர்கள், கெட்டவர்கள் தெரியாது. அப்படித்தான் தமிழ் சினிமாவில் கடவுளாக பார்க்கப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் நோய் மற்றும் முதுமை பாரபட்சம் இல்லாமல் வதைத்திருக்கிறது. இதை நேரில் பார்த்த பழம் பெரும் நடிகை பத்மினி மீடியாவில் மனம் உருகி சில விஷயங்களை பேசி இருந்தார்.

அன்றைய காலகட்டத்தில் சிவாஜி, பத்மினி ஜோடி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள். இவர்கள் இரண்டு பேரும் உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் ஏங்கி இருக்கிறார்கள். இருவருமே உண்மையிலேயே காதலித்து வந்ததாகவும் சில செய்திகள் சொல்வதுண்டு. அதன் பின்னர் சிவாஜி அவருடைய உறவுக்கார பெண் கமலாவை திருமணம் செய்து கொண்டார்.

முதல் மரியாதை படத்தின் வெற்றிக்கு பிறகு சிவாஜி டபுள் ஹீரோ கதைகளில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி நடிக்க ஆரம்பித்ததில் தேவர் மகன் மற்றும் படையப்பா படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. சிவாஜி தமிழ் சினிமாவில் கடைசியாக நடித்த படம் படையப்பா தான். 1999 ஆம் வருடத்திற்கு பிறகு சிவாஜி படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

உடல்நிலை சரியில்லாமல் சிவாஜி முழுக்க வீட்டிலேயே ஓய்வெடுக்க ஆரம்பித்தார். திரை பிரபலங்கள் அவரை வீட்டிற்கு சென்று தான் பார்த்து வந்தார்கள். அதேபோன்றுதான் நடிகை பத்மினியும் சிவாஜியை நேரில் பார்க்க சென்று இருக்கிறார். சிவாஜியின் மாடியில் அவருடைய ரூமில் இருந்திருக்கிறார். ரூமை விட்டு வேறு எங்கேயும் சிவாஜி வருவது கிடையாது.

சிவாஜியை நேரில் சந்தித்த பத்மினி

சிங்கமாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்த சிவாஜி கணேசன் உடல் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாமல் இருந்திருக்கிறார். ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் நீருக்கு மேல் அவர் அருந்தக்கூடாதாம். அப்படி குடித்தால் கை கால்கள் எல்லாம் வீங்கிவிடுமாம். சிவாஜி வீட்டில் பத்மினிக்கு பிடித்த அத்தனை அசைவ சாப்பாடுகளையும் ரெடி செய்து இருக்கிறார்கள்.

சிவாஜியை சேரில் அமர வைத்து நான்கு பேர் தூக்கிக்கொண்டு மாடியிலிருந்து கீழே வந்திருக்கிறார்கள். அந்த மேஜையில் வைத்திருக்கும் எந்த ஒரு சாப்பாட்டையும், சிவாஜியால் சாப்பிட முடியாதாம். அவரின் அந்த நிலைமையை பார்த்து விட்டு சாப்பிடாமல் கூட பத்மினி எழுந்து வந்து விட்டாராம். இப்படி முதுமையில் வாடிய சிவாஜி கணேசன் 20 நாட்கள் அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஜூலை 21ம் தேதி 2001 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.