23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாமானியன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த மக்கள் நாயகன் ராமராஜனின் அடுத்த படத்திற்கும் இசைஞானி இளையராஜாதான் இசையமைக்கிறார்.
ஏனெனில், 80-களில் இந்தக் கூட்டணி தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைத்தது என்று சொல்லலாம். அந்த அளவிற்குப் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்ததோடு மட்டுமல்லாமல், மண் மாறாத அந்த இசை ராமராஜனின் வளர்ச்சியையும் அசுர வேகத்தில் உயர்த்தியது.
ரஜினி, கமலுக்கு இணையாக சம்பளம் வாங்கும் அளவிற்கு அவரது மார்க்கெட்டை உயர்த்தியதில் இந்தக் கூட்டணியின் பங்கு முக்கியமானது. குறிப்பாக, கரகாட்டக்காரன் திரைப்படம் திரையரங்குகளில் ஓராண்டு காலம் ஓடியது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் காசிமயன் இயக்கும் ‘கடவுள் தந்த பரிசு’ படத்தில் ராமராஜன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், செந்தில், கோவை சரளா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், படத்தின் ஆறு பாடல்களுக்கும் இளையராஜா ஒரே நாளில் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். மேலும், படத்தின் ரீ-ரெக்கார்டிங் பணிகளையும் ஒரு சில நாட்களிலேயே முடித்துவிட்டதால் நெகிழ்ச்சியடைந்த ராமராஜன், இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் இவர்கள் இருவரும் இணையும் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.




