கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பள்ளி தோழன் வினோத் காம்ப்ளி. இருவரும் பள்ளி அளவில் நடக்கும் போட்டிகளில் செய்யாத சாதனைகளே இல்லை. இருவரும் இந்திய கிரிக்கெட் அணியின் கவனத்தை ஈர்த்து அணியில் ஒருவர் பின் ஒருவராக சேர்ந்து விளையாடி வந்தனர்.
ஆரம்பத்தில் தனது அபார திறமையை நிரூபித்த வினோத் காம்ப்ளி ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கவே அவரும் சற்று ஓய்ந்து விட்டார். அதன்பின் உள்ளூர் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்த வினோத் காம்பிளிக்கு கடந்த 3 ஆண்டுகளாக எந்தவொரு பணியும் இல்லை.
ஆரம்பத்தில் அவரின் உயிர் நண்பனான சச்சின் டெண்டுல்கர் கூட அவருக்கு கிரிக்கெட்டில் உதவ மறுத்து விட்டார். இந்திய அணியில் வினோத் காம்ப்ளிக்கு கஷ்ட காலம் வந்தபோது அவருக்கு ஆதரவாக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாய் இருந்து விட்டார் டெண்டுல்கர்.
இப்படி எல்லோரும் கை விட்ட நிலையில் வறுமையின் பிடிக்கு சென்றார் வினோத் காம்ப்ளி. இதனால் வெளிப்படையாக வினோத் காம்ப்ளி, பிசிசிஐ தரும் வெறும் 30 ஆயிரம் பணம் தான் என் குடும்பத்தை கவனிக்க உதவுகிறது. எனினும் அந்தப் பணம் போதுமானதாக இல்லை அதனால் எனக்கு யாராவது உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
ஒரு காலத்தில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த வினோத் காம்ப்ளிக்கே இந்த நிலைமையா என்று அனைவரும் ஆச்சரியத்தில் இருந்தபோது, அவரின் கஷ்டத்தை பார்த்த மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி அந்த தொழிலதிபர் தன்னுடைய நிறுவனத்தில் ஃபைனான்ஸ் பிரிவில் வினோத் காம்ப்ளிக்கு வேலை கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.அதற்காக அவருக்கு மாத சம்பளம் ரூபாய் ஒரு லட்சம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு வினோத் காம்ப்ளி இடமிருந்து இருந்து பதில் வரவில்லை.