ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

ஓயாத அமரன் பட சர்ச்சை.. கூலாக பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ராஜ்குமார்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான படம் அமரன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர் நேசனல் இப்பத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

வீரமரணமடைந்த ராணுவர் வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரிலீசுக்கு முன்பே பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இப்படத்தின் போஸ்டர், டிரைலர், டீசர், பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி மேலும் எதிர்பார்ப்பை கூட்டியது.

இந்தக் காலத்தில் தேசப்பற்று படங்கள் வருகை குறைந்துவிட்ட தாக கூறப்பட்ட நிலையில், மேஜர், ஷெர்ஷா ஆகிய படங்களுக்கு இணையாக அமரம் படமும் திரைக்கதை, கதை, காட்சியமைப்பில், பிரமாண்டத்தில், நடிப்பில் என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

அமரன் பட சர்ச்சைக்கு இயக்குனர் விளக்கம்

இந்த நிலையில், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு படமாக இது எடுக்கப்பட்டாலும், இதில், அவரது உண்மையான சமூகம் இப்படத்தில் மறைக்கப்பட்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் நடந்த அமரன் திரைப்பட வெற்றிவிழாவின்போது இப்படம் பற்றிய சர்ச்சைகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : “முகுந்தன் ஒரு தமிழர் என்ற அடையாளம்தான் இப்படத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் அவரது மனைவி இந்து ரெபக்கா வர்கீஸ் எங்களிடம் வைத்த கோரிக்கை.

அதேபோல், அவர் நைனா, என்று அழைக்கும் அவரின் தந்தை வரதராஜனும், ஸ்வீட்டி என்று அழைக்கும் தாய் கீதாவும் எங்களிடம் வைத்த கோரிக்கை, முகுந்த் தன்னை எப்போதும் இந்தியன் என்று சொல்லிக் கொள்ளவே ஆசைப்படுவார். தன் சான்றிதழில் கூட எவ்வித குறியீடும் இருக்கக் கூடாது என்று நினைப்பார். அதன்படி, ஒரு இந்தியன், தமிழன் என்ற அடையாளத்தை மட்டும் ஒரு ராணுவ வீரராக இப்படத்தில் அவருக்குக் கொடுங்கள் என்பதுதான்.

அதனால், ஒரு இயக்குனராக அவரது சமூகம் என்பது என் பார்வைக்கு முக்கிய விஷயமாக இருக்கவில்லை. அவர்களின் இல்லத்துக்குச் சென்ற போதும் அவர்களிடம் இதுபற்றி நாங்கள் கேட்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸூக்குப் பின் எழுந்த சர்ச்சைக்கு இயக்குனர் கூலாக விளக்கம் அளித்தது பற்றி ரசிகர்கள் பாராட்டுகள் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News