தமிழ் சினிமாவில் இப்போது புகழின் உச்சியில் இருக்கும் பல பிரபலங்கள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் தான். குழந்தைகளாக இருக்கும்போது நடிப்பில் மிரட்டிய இவர்கள் இப்போது ஹீரோ, ஹீரோயின் ஆகவும் கலக்குகின்றனர். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வெற்றி பெற்ற ஆறு பிரபலங்கள் பற்றி இங்கு காண்போம்.
கமல்ஹாசன்: ரசிகர்களால் உலக நாயகன் என்று போற்றப்படும் இவர் தன்னுடைய ஐந்து வயதிலேயே நடிக்க ஆரம்பித்துவிட்டார். 1960 ஆம் ஆண்டு வெளிவந்த களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கும் கமல் இன்று உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறார்.
விஜய்: வெற்றி, குடும்பம் உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய் தற்போது தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக உருவெடுத்துள்ளார். ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கும் இவர் தனக்கென ஒரு இடத்தை பிடித்து உலக அளவில் பிரபலம் ஆகி இருக்கிறார்.
சிம்பு: இயக்குனர் டி ராஜேந்தரின் மகனான இவர் அவருடைய அப்பா இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அதன் பிறகு ஹீரோவாக நடிக்க வந்த சிம்பு பல வெற்று திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வசூல் பெற்றது.
ஸ்ரீதேவி: கோலிவுட்டில் மட்டுமல்லாமல் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த இவர் குழந்தையாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு ஹீரோயினாக ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் ஹிந்தி திரையுலகிலும் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்தார்.
மீனா: சிறுவயதிலேயே நடிக்க வந்த இவர் பின்னாளில் பிரபல ஹீரோயினாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். கண்ணழகி என்று புகழப்படும் இவர் திருமணத்திற்கு பிறகும் கூட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஷாலினி: ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் அதற்காக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். சில கால இடைவெளிகளில் ஹீரோயினாக மாறிய இவர் விஜய்யுடன் காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து நடிகர் அஜித்தை காதலித்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பே வேண்டாம் என்று ஒதுங்கி குடும்பத்தை கவனித்து வருகிறார்.