Actor Kamal Haasan: இப்போதெல்லாம் உலக நாயகன் கமலஹாசனின் படங்களை வருடத்திற்கு ஒரு முறை பார்ப்பது என்பது ரொம்பவும் அரிதாக இருக்கிறது. ஆனால் கமல் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும்பொழுது ஒரே நாளில் மொத்தம் நான்கு படங்களை ரிலீஸ் செய்திருக்கிறார். இந்த நான்கு படங்களும் 1978 ஆம் ஆண்டு தீபாவளி ரிலீஸ் ஆக வெளியிடப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தும் இருக்கிறது.
மனிதரில் இத்தனை நிறங்களா: இயக்குனர் ஆர். சி. சக்தி இயக்கத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி, மனோரமா, சுருளி ராஜன் ஆகியோர் நடித்த திரைப்படம் மனிதரில் இத்தனை நிறங்களா. இந்த படம் முழுக்க ஸ்ரீதேவியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதை. கடந்த கால வாழ்க்கையால் இயல்பு நிலைக்கு மாற முடியாமல் தவிக்கும் பெண்ணின் கதையாக இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. வசூல் ரீதியாக வெற்றியும் அடைந்தது.
அவள் அப்படித்தான்: உலகநாயகன் கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான திரைப்படம் அவள் அப்படித்தான். இந்த படம் வணிக ரீதியாக வெற்றி அடையவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் கடைசியாக வெளியான கருப்பு வெள்ளை திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
தப்புத் தாளங்கள் : இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகை சரிதா நடித்த திரைப்படம் தப்புத் தாளங்கள். இந்த படத்தில் கமலஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தப்புத் தாளங்கள் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழியில் படமாக்கப்பட்டது. இந்த படமும் விமர்சன ரீதியாக இன்று வரை தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வருகிறது.
சிகப்பு ரோஜாக்கள்: இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், நடிகை ஸ்ரீதேவி நடித்த திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள். இன்றைய க்ரைம் திரில்லர், சைக்கோ கில்லர் போன்ற கதைகளுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்தது இந்தப் படம் தான். பாரதிராஜாவின் இயக்கத்தில் வித்தியாசமாக வெளியான படம் என்று கூட இதை சொல்லலாம். இந்த படம் மொத்தம் 20 நாட்களில் படமாக்கப்பட்டது.
தீபாவளி ரிலீஸ் ஆக வெளியான இந்த படம் 175 நாட்கள் ஓடி வெற்றி விழா கண்டது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மூன்று மாநிலங்களிலும் வெள்ளி விழா கண்ட ஒரே படம் சிகப்பு ரோஜாக்கள் தான். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது கமலஹாசனுக்கும், சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது பாரதிராஜாவுக்கும் கிடைத்தது. இந்த வெற்றியின் தாக்கத்தால் 1980 ஆம் ஆண்டு பாரதிராஜா இதே படத்தை ரெட் ரோஸ் என்ற பெயரில் ஹிந்தியில் இயக்கினார்.