இன்றைய நவீன காலத்தில் கோலிவுட் படங்கள் முதல் ஹாலிவுட் படங்கள் வரை ரிலீஸ் ஆன ஒரு மணி நேரத்திலேயே இருந்த இடத்தில் இருந்து பார்த்து விடுகிறார்கள். ஆனால் தொழில்நுட்பங்கள் அவ்வளவாக வளராத காலத்தில் தங்களுக்கு பிடித்த படங்களை எப்போது தொலைக்காட்சியில் போடுவார்கள் என்று தவமாய் தவமிருந்து பார்த்த நேயர்கள் அதிகம். வார இறுதி நாட்களில் இருந்து, பொங்கல் மற்றும் தீபாவளிக்கு எந்த ஹீரோவின் படங்கள் போடுவார்கள் என்று அப்போதெல்லாம் மிகப்பெரிய ஆர்வம் இருக்கும்.
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஒவ்வொரு கொண்டாட்ட நிகழ்வின் போதும் எந்த படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்கி வெளியிடலாம் என தங்களுக்குள் மிகப்பெரிய போட்டியே வைத்துக் கொள்வார்கள். சில நேரங்களில் எந்த சேனலில் படத்தை பார்ப்பது என புலம்பி தவித்த 90ஸ் கிட்ஸ்களும் உண்டு. விளம்பர இடைவெளியில் சேனல்களை மாற்றி, மாற்றி ஒரே நேரத்தில் 2,3 படங்களை பார்த்துவிடுவார்கள்.
தொலைக்காட்சி சேனல்களும் ஏதாவது ஒரு புது படத்தை ஒளிபரப்புவது என்றால் கொடுக்கும் அலப்பறைகளும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். படம் போடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பில் இருந்தே ஹைப்பை அதிகமாக்கி விடுவார்கள். மேலும் இது போன்ற படங்களுக்கு விளம்பரங்களும் எக்கச்சக்கம் என்பதால் ஒரு புது படத்தை பார்ப்பதற்குள் நொந்தே போய்விடுவார்கள் ரசிகர்கள்.
அப்படி ஒரு சேனல் தான் 2 மணி நேர படத்தை விளம்பரங்களோடு சேர்த்து எட்டு மணி நேரம் ஓட்டி படம் பார்ப்பவர்களையே தலை தெறிக்க ஓட விட்டிருக்கிறது. 1996 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த இந்தியன் திரைப்படத்தை முதன் முதலில் ராஜ் டிவி தான் ஒளிபரப்பி இருக்கிறது. எட்டு மணிக்கு போடப்பட்ட இந்த படம் விளம்பரங்களோடு சேர்த்து நள்ளிரவு 12 மணிக்கு தான் முடிந்திருக்கிறது.
ஊழலுக்கு எதிராக சமூக கருத்துக்களோடு எடுக்கப்பட்ட இந்த படம் பிரம்மாண்டத்திலும் உச்சம் தொட்டது. அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் சங்கர் தான். இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டையாடிய பாட்ஷா படத்தின் வசூலையே அசால்டாக தட்டி தூக்கி விட்டது. ரசிகர்களிடையேயும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியதால் ராஜ் டிவியில் ஒளிபரப்பப்படும் பொழுது நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
என்னதான் வெற்றி படமாக இருந்தாலும் அதை எட்டு மணி நேரம் ஒளிபரப்பியது எல்லாம் அசாத்திய சாதனை என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தை பார்த்த நேயர்கள் நொந்து போய்விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இந்தியன் படத்தின் சாட்டிலைட் உரிமை கலைஞர் டிவியிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.