80ஸ், 90ஸ் கிட்ஸ்களின் உலகநாயகன், 2k கிட்ஸ்களின் ஆண்டவர்.. அடேங்கப்பா இதெல்லாம் வேற யாராலும் செய்ய முடியாது

Actor Kamal Haasan: 1960 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன களத்தூர் கண்ணம்மா படத்தில் செல்வம் எனும் கேரக்டரில் நடித்த கமலஹாசன் என்னும் சிறுவன் தான், தமிழ் சினிமாவையே ஆளப்போகும் உலக நாயகன் என்று அப்போது சொல்லி இருந்தால் யாருமே நம்பி இருக்க மாட்டார்கள். சினிமா என்றால் என்னவென்றே தெரியாமல் கால் பதித்த கமல் இன்று சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். கமலஹாசன் பணம் சம்பாதிப்பதற்காக சினிமாவில் இருக்கிறார் என்று சொன்னால் அதை அவருடைய எதிரிகள் கூட நம்ப மாட்டார்கள்.

உதவி இயக்குனர், கதை ஆசிரியர், உதவி நடன இயக்குனர், நடன இயக்குனர் என ஏதாவது ஒரு வகையில் சினிமாவில் பயிற்சி பெற்றுக் கொண்டே இருந்த கமல், ஒரு முன்னணி ஹீரோவாக ஆன பிறகும், அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் தன்னுடைய புதிய முயற்சிக்கான களமாகவே ஆக்கினார். ஆவிட்,டால்பி,பிராஸ்தடிக் மேக்கப்,லைவ் ரெக்கார்டிங், திரைக்கதை எழுத சாப்ட்வேர் என நிறைய தொழில் நுட்பங்களை தமிழில் அறிமுகப்படுத்தியது கமல் தான்.

ஒரு ஹீரோ நடித்த படத்தை வேறொரு ஹீரோ நடித்திருந்தாலும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நினைப்பதுண்டு. ஆனால் கமலஹாசனின் ஒரு சில கேரக்டர்களை அவரை தவிர யாராலும் பண்ணி இருக்கவே முடியாது என அடித்து சொல்லலாம். மூன்றாம் பிறை, குணா, அபூர்வ சகோதரர்கள், தெனாலி, தசாவதாரம், அன்பே சிவம், இது போன்ற படங்களின் கமலின் கேரக்டர்களை வேறு எந்த ஹீரோவாலும் ஏற்று நடித்திருக்க முடியாது.

மற்ற ஹீரோக்களின் படங்கள் எல்லாம் வசூல் சாதனை, மாஸ் ஹிட் என பெருமை பேசிக்கொண்டாலும், கமலஹாசனின் படங்கள் மட்டுமே ஒவ்வொரு முறையும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருக்கிறது. கமல் நினைத்திருந்தால் மாஸ் ஆன ஹிட் படங்களை கொடுத்து 100 கோடிக்கு மேல் சம்பளம் என வாங்கிக்கொண்டு தன் வேலையை பார்த்து இருக்கலாம். ஆனால் அவரோ ஒரு படத்தில் சம்பாதித்த பணத்தை, அடுத்த படத்தில் போட்டு புதிய முயற்சியை எடுப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கிறார்.

உலக நாயகன் கமலஹாசனுக்கு பல வருடங்களுக்குப் பிறகு பொருளாதார ரீதியாக வெற்றிப் படம் என்றால் அது அவருடைய சொந்த தயாரிப்பில் வெளியான விக்ரம் தான். படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்ததும் அடுத்து தன்னுடைய படங்களின் மேல் கவனம் செலுத்தாமல் சிவகார்த்திகேயன், சிம்பு, கவின், என வளர்ந்து வரும் ஹீரோக்களை தூக்கிவிட தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை பயன்படுத்துகிறார்.

மிகப்பெரிய ஹீரோக்கள் எப்போதுமே சின்ன திரையில் பணிபுரிய யோசிப்பார்கள். ஆனால் விஜய் டிவி முதன் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சியை களத்தில் இறக்கிய பொழுது கமலஹாசனுடன் கைகோர்த்தது. கமல் நிகழ்ச்சி தொகுப்பாளரா என ரசிகர்களை ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், அவர் அதையும் சிறப்பாக செய்தார். கமல் வரும் எபிசோடுகளை மட்டுமே பார்க்கும் பிக் பாஸ் ரசிகர்களும் இருக்கிறார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகள் வரை கவர்ந்து விட்டார்.

சினிமாவில் இருந்து அடுத்து இந்த ஹீரோ தான் அரசியலுக்கு வருவார் என ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், குறுகிய காலத்திலேயே அரசியல் அறிவிப்பையும் வெளியிட்டு, கட்சி தொடங்கி, தேர்தலில் களம் கண்டவர் கமலஹாசன். இன்றுவரை அரசியல் மற்றும் சினிமாவை நேர்த்தியாக கையாண்டு வருகிறார்.

இளம் ஹீரோக்கள் கூட வருடத்திற்கு ஒரு படம் என அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், கமலஹாசனின் கைவசம் தற்போது நான்கு, ஐந்து படங்கள் இருக்கின்றன. விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் அவருடைய இந்தியன் 2 படத்தில் கூட புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார் கமல். கமல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் கல்கி படத்தின் மீது ஏற்கனவே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் எப்போதுமே சூப்பர் ஸ்டார் தான். அவருடைய படங்களின் கலெக்ஷன் எப்போதுமே பெரிய மைல் கல் தான். ஆனால் கமல் சினிமாவை பார்க்கும் விதமே வேறு. இன்றுவரை படம் நடித்தோம், பணத்தை வாங்கினோம் என இல்லாமல் அந்தப் படத்தில் தன்னால் முடிந்த வரை என்னவெல்லாம் செய்யலாம் என யோசித்து சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மகா கலைஞன் இவர்.