சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவருமே சமகாலத்து போட்டியாளர்கள். ரஜினிகாந்த்திற்கு முன்னாலேயே கமலஹாசன் சினிமா துறைக்கு வந்திருந்தாலும், திரைக்கதை ஆசிரியர், டான்ஸ் மாஸ்டர், சப்போர்ட்டிங் கேரக்டர் என தான் அவர் நடித்துக் கொண்டிருந்தார். நடிகர் சிவகுமார் ஹீரோவாக நடித்த படங்களில் கூட கமலஹாசன் சப்போர்ட்டிங் கேரக்டராக நடித்திருப்பார். இதனால் ஒரு கதாநாயகனாக கமல் மற்றும் ரஜினியின் பயணம் என்பது ஒரே நேரத்தில் தான் ஆரம்பித்தது.
ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 15 படங்களுக்கு மேல் பணிபுரிந்து இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இருவருமே சேர்ந்து நடிப்பது என்பது தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே லாபம் நம்மால் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்பதை உணர்ந்த கமலஹாசன் ரஜினியிடம் இதைப் பற்றி பேசி இனி இருவரும் இணைந்து படம் பண்ணவே போவதில்லை என்ற முடிவெடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
கமல் மற்றும் ரஜினி இப்படி ஒரு முடிவு எடுத்த பிறகு கோலிவுட் சினிமாவே ஒரு பக்கம் கமலஹாசன் ரசிகர்கள் ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள் என தீ பிடித்தது என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் இருவருடைய படங்களும் ரிலீஸ் ஆகும் சமயத்தில் ரசிகர்கள் இடையே அப்படி ஒரு போட்டி இருக்கும். ஆனால் இருவரது சொந்த வாழ்க்கையையும் பார்த்தால் இவர்களைப் போல் நட்பு பாராட்டக்கூடிய முன்னணி ஹீரோக்கள் இந்திய சினிமாவில் இல்லை என்று சொல்லிவிடலாம்.
பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பொறுத்த வரைக்கும் தனக்கான எந்த மேடை கிடைத்தாலும் அந்த இடத்தில் இயக்குனர் கே பாலச்சந்தர் மற்றும் உலக நாயகன் கமலஹாசனை பற்றி கண்டிப்பாக பேசி விடுவார். இது எல்லோருமே வியந்து பார்க்கும் ஒரு விஷயம் தான். ஆனால் ஒரு சில வருடங்களுக்கு முன்பு உலகநாயகன் கமலஹாசன் ஒரு மேடையில் ரஜினிகாந்தை பற்றி பேசியது அனைவரையுமே வியப்பில் ஆழ்த்தியது.
அந்த மேடையில் சினிமாவில் என்னை ஓடவிட்டவர் ரஜினிகாந்த் என்று சொல்லி இருக்கிறார் கமல். அதாவது ஒரு நல்ல நடிகனாக நடித்துக் கொண்டிருந்த நான் இன்று இந்த அளவுக்கு பல முயற்சிகளை செய்து வெற்றி அடைந்திருக்கிறேன் என்றால் அது ரஜினியை பார்த்து நான் பயந்தது தான் காரணம், ரஜினி போன்ற ஒரு ஹீரோ நம் பின்னாலேயே வந்து கொண்டே இருக்கிறார் என்ற எண்ணமே என்னை இவ்வளவு தூரம் ஓட வைத்தது என்று கமலஹாசன் உணர்ச்சிபூர்வமாக சொல்லி இருக்கிறார்.
இவர்கள் இருவரும் வளர்ந்து வந்த காலத்தில் ரஜினிகாந்தை விட கமலஹாசனுக்கு கொஞ்சம் பேரும் புகழும் அதிகமாக தான் இருந்தது. இருவரும் சேர்ந்து நடித்த படங்களில் சூப்பர் ஸ்டாரை விட உலக நாயகனுக்கு தான் சம்பளம் அப்போது அதிகம். அப்படி இருந்த ரஜினி பல தோல்விகள் மற்றும் அவமானங்களை சந்தித்து இன்று கோலிவுட்டின் நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கிறார். இவர்கள் இருவருடைய ஆரோக்கியமான போட்டியை இன்றைய ஹீரோக்கள் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும்.