திரையுலகில் அடுத்தடுத்து வெளிவரும் மரண செய்திகள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் உலுக்கி வருகிறது. ஏற்கனவே வாணி ஜெயராம், பழம்பெரும் நடிகர் விஸ்வநாத், இயக்குனர் டி பி கஜேந்திரன் ஆகியோரின் இறப்பு திரையுலகத்திற்கு பெரும் இழப்பாக இருந்தது. அந்த வரிசையில் தற்போது மற்றொரு மரணச் செய்தியும் இணைந்து இருக்கிறது.
அதாவது 100 படங்களுக்கும் மேல் நடித்து தன் நகைச்சுவையால் ரசிகர்களை மகிழ்வித்த நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரின் திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களின் மூலம் தான் முன்னணி இடத்திற்கு வந்தார்.
அப்படிப்பட்ட ஒரு சிறந்த கலைஞனின் மறைவு நம் தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பாக இருக்கிறது. மகா சிவராத்திரியான நேற்று மயில்சாமி கேளம்பாக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்று இருக்கிறார். அப்போது வீட்டுக்கு வரும் வழியிலேயே அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதைத்தொடர்ந்து உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டார் என்று உறுதிப்படுத்தி இருக்கின்றனர். தற்போது மயில்சாமியின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்திருந்த மயில்சாமி இப்படி திடீரென உயிரிழந்திருப்பது அவருடைய குடும்பத்தினரை மீளா துயரில் ஆழ்த்தி இருக்கிறது.
தற்போது அவருடைய குடும்பத்தினருக்கு நடிகர்கள் ரமேஷ் கண்ணா, மனோபாலா உள்ளிட்ட பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் மயில்சாமி கடைசியாக தி லெஜன்ட், உடன்பால் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இது எல்லாவற்றிற்கும் மேலாக சன் டிவியில் காமெடி டைம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாமல் நடிப்பு என்ற விஷயத்தை தாண்டி பொதுமக்களுக்கு உதவிகள் செய்வதிலும் இவர் ஆர்வம் காட்டி வந்தார். சென்னையில் புயல், மழை பாதிப்பு ஏற்பட்ட போது கூட இவர் மக்களுக்கு தன்னால் முடிந்த பல உதவிகளை செய்திருக்கிறார். இப்படி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த மயில்சாமியின் மரணம் திரையுலகினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் பெரும் துயரில் ஆழ்த்திவிட்டது.