சாக்லேட், காக்க காக்க, மச்சி போன்ற படங்களில் நடித்தவர்தான் நடிகர் கூல் சுரேஷ். பொதுவாக ரொம்பவும் கலகலப்பாக பேசக்கூடிய நடிகர் இவர். இவர் நடித்துப் பெயர் வாங்கியதை காட்டிலும் நடிகர் சிம்புவின் ரசிகனாக தன்னை வெளி உலகத்துக்கு காட்டிக்கொண்ட பின்பு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும். சிம்பு ரசிகர்களிடம் இவருக்கு ஆதரவு அதிகம்.
நடிகர் சிம்புவின் ரீ என்ட்ரியில் மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த பிறகு அவர் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது கூல் சுரேஷ் அந்தப் படத்திற்காக செய்த பிரமோஷன் என்பது அவரை பயங்கர வைரல் ஆக்கியது. எங்கு சென்றாலும் வெந்து தணிந்தது காடு… வணக்கத்தை போடு என்று சொல்லி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அந்த சமயத்தில் நடிகர் சிம்பு கூட கூல் சுரேஷ் எதிர்காலத்திற்கு நான் பொறுப்பு என்று பொது மேடையில் அறிவித்தார். அந்த அளவுக்கு சிம்புவிடமும், அவருடைய ரசிகர்களிடமும் நல்ல பெயரை வாங்கினார். ஆனால் சில நேரங்களில் இவர் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்கள் முதல் பொதுமக்கள் வரை காண்டாகும் விதமாகவே அமைந்தது.
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் கூட சம்பந்தமே இல்லாமல் கதறி கதறி அழுது ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அனைவரது வெறுப்பையும் சம்பாதித்தார். தற்போது பத்து தல ரிலீசாக இருப்பதற்கு முன்னால் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர் செய்த விஷயம் எல்லோரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
படகில் செல்வது போல் எடுக்கப்பட்ட அந்தப் பேட்டியின் போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நீங்கள் சிம்புவின் பெயரை வைத்து ஆதாயம் தேடுகிறீர்கள் என்று வெளியில் பேசி கொள்கிறார்கள் என கேள்வி கேட்டார். அதற்கு சில வினாடிகள் பொறுமையாக பதில் அளித்த கூல் சுரேஷ் திடீரென்று கோபப்பட்டு கடலில் குதித்து விட்டார். இதனால் அந்த தொகுப்பாளரே சற்று பதறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
உடனடியாக அந்த படகில் இருந்த நான்கைந்து பேர் அவரை காப்பாற்ற கடலில் குதித்து கயிறு கட்டி இழுத்து அவரை மேலே கொண்டு வந்தனர். அவர் இயல்பாக இதை செய்யாதது போலவும் ஏற்கனவே திட்டமிட்டு தான் இதை செய்திருப்பது போலவும் அந்த காட்சியை நன்றாக பார்க்கும்போதே தெரிகிறது. பத்து தல திரைப்படத்திற்காக இப்படி ஒரு மட்டமான பிரமோஷனை கூல் சுரேஷ் செய்கிறார் என்று தற்போது நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இவருடைய செயலால் சிம்புவின் பெயரும் அடி வாங்குகிறது.