Director Nelson: கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறிய நெல்சன் திலீப் குமார், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது. இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
தற்போது இயக்குனர் நெல்சன், தயாரிப்பாளராக இருக்கிறார். நெல்சன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இதன் மூலம் தான் அவருக்கு நடிகர் சிவகார்த்திகேயனின் நட்பும் கிடைத்தது. தற்போது மற்றொரு நண்பனுக்காக தயாரிப்பாளராக களம் இறங்குகிறார்.
இயக்குனர் நெல்சன், தயாரிப்பாளராக தன்னுடைய முதல் முயற்சியை எடுத்து வைப்பது நடிகர் கவினுக்காகத்தான். கவின் சினிமாவில் வருவதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியின் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்ததோடு, அதன் மற்ற நிகழ்ச்சிகளிலும் பணி புரிந்து கொண்டிருந்தார். அப்போதிலிருந்தே கவின் மற்றும் நெல்சன் இடையே நல்ல நட்பு இருந்திருக்கிறது.
நடிகர் கவினுக்கு தற்போது தமிழ் சினிமாவில் ஏறுமுகமாக இருக்கிறது. லிப்ட், டாடா போன்ற படங்களின் வெற்றியினால் அவர் தற்போது முன்னணி ஹீரோக்களின் வரிசையில் வந்து கொண்டிருக்கிறார். உலகநாயகன் கமலஹாசன் நேரில் அழைத்து பாராட்டும் அளவுக்கு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த கவின், அவருடைய தயாரிப்பிலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
கவின் நடித்த டாடா பட வெற்றியே அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்திருந்தது. அதே நேரத்தில் தற்போது கவின் தன்னுடைய நீண்ட கால தோழியான மோனிகா டேவிட் என்பவரை வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக வெளியான அதிகாரப்பூர்வ தகவல் அவருடைய ரசிகர்களை மேலும் குஷி ஆக்கி இருக்கிறது.
கவினுக்கு கல்யாண கலை வந்த நேரத்தில், அவருக்காக இயக்குனர் நெல்சன் தயாரிப்பாளராகவும் மாற இருக்கிறார். இந்த படத்தின் மற்ற தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இயக்குனர் உறுதியானதும் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.