ஒரு படம் வெளியானால் மட்டுமே அப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றதா அல்லது தோல்வி அடைந்ததா என்பதை கணிக்க முடியும். ஆனால் அதே படம் வெளியாகும் முன்பே வியாபாரமாவதை பொறுத்து அப்படம் வணிக ரீதியாக லாபமா நஷ்டமா என்பதை எளிதில் கணித்து விடலாம். அந்த வகையில் டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே லாபம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள டாக்டர் படம் நாளை வெளியாக உள்ளது. படம் வெளியாவதை ஒட்டி ஆயுத பூஜை விடுமுறை வருவதாலும், போட்டிக்கு எந்த படங்களும் இல்லாததாலும் அனைத்து ஏரியாக்களிலும் டாக்டர் படம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளதாம்.
அதாவது டாக்டர் மொத்த பட்ஜெட்டே 45 கோடி ரூபாய் தானாம். முதலில் டாக்டர் படத்திற்கு 52 கோடி ரூபாய் பட்ஜெட் வைத்துள்ளனர். ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ஹீரோ படம் தோல்வி அடைந்ததால் சுமார் 7 கோடி ரூபாய் வரை குறைத்து 45 கோடி ரூபாயாக பட்ஜெட் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் டாக்டர் படம் இதுவரை சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை என மொத்தம் 62.60 கோடி ரூபாய் வரை வியாபாரமாகி உள்ளதாம். எப்படி பார்த்தாலும் தோராயமாக சுமார் 12 கோடி ரூபாய் வரை தயாரிப்பாளர் லாபம் பார்த்து விட்டார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

தற்போது படம் வியாபாரமாகியுள்ள கணக்குபடி பார்த்தால் லாபம் தானாம். ஆனால் படத்தை விநியோகஸ்தர்களிடம் அட்வான்ஸ் வாங்கி விநியோகம் செய்துள்ளதால், படம் வெளியான பின்னரே முழுமையான லாப நஷ்ட கணக்கு தெரியவரும் என கூறப்படுகிறது. எனவே நாளை படம் வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.