சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான கவினுக்கு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரும் அடையாளத்தை கொடுத்தது. அதில் அவர் சில பல சர்ச்சைகளை சந்தித்தாலும் தற்போது திரையுலகில் வளர்ந்து வரும் ஒரு நடிகராக மாறி இருக்கிறார். ஏற்கனவே சில திரைப்படங்களில் அவ்வப்போது இவர் தலைக்காட்டி வந்தாலும் ஹீரோவாக இப்போது அவர் முன்னேறி வருகிறார்.
ஏற்கனவே கவின் நடிப்பில் வெளிவந்த லிப்ட் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை தேடி கொடுத்தது. அதை தொடர்ந்து தற்போது வெளிவந்த டாடா திரைப்படத்திற்கும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் அவர் இந்த படத்தின் மூலம் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் தற்போது அவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. அதிலும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் கூட இவர் கமலை சந்தித்த போட்டோவை தன் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த பலரும் இது அடுத்த கூட்டணிக்கான சந்திப்பா என்ற ரீதியில் கேள்வி எழுப்பினார்கள்.
இது ஒரு புறம் இருந்தாலும் தற்போது கவின் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பல திரைப்படங்களில் நடன இயக்குனராக இருந்த சதீஷ் பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்நிலையில் இவர் இயக்குனர் அவதாரம் எடுத்திருப்பது அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் மூலம் ராகுல் தயாரிக்கிறார். முழுக்க முழுக்க ரொமான்டிக் கலந்து உருவாக இருக்கும் இப்படம் நிச்சயம் கவினுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துமாம். அந்த அளவுக்கு இந்த கூட்டணி தரமான ஒரு கதையுடன் களம் இறங்க இருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து கவினின் அடுத்தடுத்த திரைப்பட அறிவிப்பும் வெளிவர இருக்கிறது.
ஏற்கனவே கவினுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இதில் அடுத்தடுத்து பெரிய கூட்டணியுடன் இவர் கைகோர்த்து இருப்பது அவருக்கான முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கமலுடன் இவர் இணைய இருக்கும் அறிவிப்பு மட்டும் வெளியாகி விட்டால் சிவகார்த்திகேயனுக்குப் பிறகு விஜய் டிவியின் பிரபலமான இவரும் மிகப்பெரிய அளவில் கவனம் பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.