ஆதிக்கம் செலுத்தும் 4 குடும்பங்கள்.. பாலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டில் ஆரம்பிக்கும் நெப்போடிசம்

Kollywood Nepotism: வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் என்பது எப்போதுமே இந்தி சினிமா உலகில் தான் அதிகமாக இருக்கும். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் அடுத்தடுத்து படங்களில் நடிப்பார்கள். இதுவரை தமிழ் சினிமாவில் அந்த ஒரு விஷயம் இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாகவே கோலிவூட்டிலும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தலை தூக்க ஆரம்பித்துவிட்டது. இனிவரும் தமிழ் சினிமா இந்த நான்கு குடும்பங்களின் கையில்தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆதிக்கம் செலுத்தும் 4 குடும்பங்கள்

ரஜினி குடும்பம்: ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவருமே திரைக்குப் பின்னால் வேலை செய்வதை விரும்பி வருகிறார்கள். இயக்குனர், பின்னணி பாடகர், ஆடை வடிவமைப்பாளர் என எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது மீண்டும் இயக்குனராக ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அப்பாவை கேமியோ ரோலில் நடிக்க வைத்து படத்தை ஓட்டி விடலாம் என பெரிய திட்டத்துடன் வந்திருக்கிறார்.

விஜய் குடும்பம்: தளபதி விஜய்யின் அப்பா தமிழ் சினிமாவில் புரட்சி இயக்குனராக இருந்தவர். இப்போது நடிகராக தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வருகிறார். அவருடைய அம்மா ஒரு சில படங்களில் பாடியிருக்கிறார். இப்போது விஜய்யை தொடர்ந்து அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களம் இறங்குகிறார். நிறைய அனுபவங்கள் இருக்கும் இயக்குனர்களுக்கு கூட கிடைக்காத வாய்ப்பாக ஜேசன் சஞ்சய்க்கு முதல் படமே லைக்காவுடன் பணிபுரியும் வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

தனுஷ் குடும்பம் : தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா நிறைய கிராமத்து படங்களை இயக்கி புகழ்பெற்றவர். அவருக்குப் பிறகு தனுஷ் ஹீரோவாகவும், அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்குனராகவும் களமிறங்கினார்கள். தனுஷ் ரஜினியின் மூத்த மகளை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு விவாகரத்து செய்திருக்கிறார். தற்போது தன்னுடைய அக்கா மகனை ஹீரோவாக்க தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சிவகுமார் குடும்பம்: பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன்கள் சூர்யா, கார்த்தி இரண்டு பேரும் சினிமாவில் வெற்றி நாயகர்களாக இருக்கிறார்கள். சூர்யாவின் மனைவி ஜோதிகா திருமணத்திற்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். அவரை தொடர்ந்து சிவகுமாரின் மகள் பிருந்தா பின்னணி பாடகி ஆகியிருக்கிறார். சிவகுமாரின் உறவினர் ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பெரும்பாலும் கார்த்தியின் படங்களை இவர் தான் தயாரிக்கிறார்.

பாலிவுட் உலகை ஆட்டி படைக்கும் நெப்போடிஸம் தமிழ் சினிமாவிலும் தலை தூக்குவது ரொம்பவும் வருந்தக்கூடிய விஷயமாக இருக்கிறது. சினிமாவில் ரொம்பவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி கூட தங்களுடைய மகன்களை கஷ்டமே பட விடாமல் ஹீரோக்கள் ஆக்கி இருப்பது வியப்புக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.