வசூலை அள்ளிய வெந்து தணிந்தது காடு.. கமல் பாணியில் பரிசு கொடுத்த ஐசரி கணேஷின் புகைப்படம்

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீசான வெந்து தணிந்தது காடு திரைப்படம் பலதரப்பட்ட மக்களிடம் இருந்தும் பாசிட்டிவ் ரிவியூக்களை பெற்றது. உலகம் முழுவதும் இந்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி இருக்கிறது என்றே சொல்லலாம்.

வெந்து தணிந்தது காடு படத்தை வேல்ஸ் இன்டர்நெஷனல் உரிமையாளர் ஐசரி கணேஷ் தயாரித்து இருந்தார். இவர் எல் கே ஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன் போன்ற பல வெற்றி படங்களை தயாரித்து இருக்கிறார். ஏற்கனவே கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை இவர் தான் தயாரித்து இருந்தார்.

இப்போது இவர் தயாரித்த வெந்து தணிந்தது காடு எதிர்பார்த்ததை விட அதிக வசூலை அள்ளி கொடுத்திருக்கிறது. 30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரிலீஸ் ஆன 10 நாட்களுக்குள் 50 கோடி வசூலை தாண்டி விட்டது. இதனால் படக்குழு பயங்கர உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்த படத்தின் சக்ஸஸ் மீட் கூட சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது பேசிய ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் வரும் எனவும், முதல் பாகத்தை விட பிரமாண்டமாக இருக்கும் எனவும் மேலும் இரண்டாம் பாகம் பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆகும் என்றும் கூறினார்.

இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்ததை கொண்டாடும் விதமாக ஐசரி கணேஷ் இயக்குனர் கௌதம் மேனனுக்கு புல்லட் பைக் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். இந்த பைக்கின் மதிப்பு இரண்டு லட்சம் இருக்கும் என்கிறார்கள். இப்போது இந்த புகைப்படம் தான் சமூக வலைத்தளங்களில் டிரண்ட் ஆகி கொண்டிருக்கிறது.

ஏற்கனவே நடிகர் கமலஹாசன் விக்ரம் பட வெற்றியை கொண்டாடும் விதமாக அந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 80 லட்சம் மதிப்புள்ள காரை பரிசளித்தார். மேலும் அந்த படத்தின் உதவி இயக்குனர்களுக்கு பைக் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.