புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 எது முதலில் தொடங்கும்.. உறுதி செய்த செல்வராகவன்

தமிழ் சினிமாவில் மற்ற இயக்குனர்களை காட்டிலும் இயக்குனர் செல்வராகவனின் படங்கள் வித்தியாசமாக இருக்கும். மேலும் பெரும்பாலும் செல்வராகவன் தனது தம்பி தனுஷின் படங்களை இயக்கியுள்ளார். அந்த வகையில் தனுஷின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் புதுப்பேட்டை.

சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு இளைஞன் எப்படி தாதா மாறுகிறான் என்பதே படத்தின் கதை. இப்படத்தில் தனுஷின் மாறுபட்ட நடிப்பால் பலராலும் பாராட்டுகளைப் பெற்றார். இந்நிலையில் 10 ஆண்டுகளாக புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டுயிருந்தனர்.

அதே போல் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களின் பாராட்டை பெற்றிருந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் தொடங்கும் என பேச்சுக்கள் அடிபட்டு வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் செல்வராகவன் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றி பேசியிருந்தார். இந்த இரு படங்களின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக உருவாகும் என செல்வராகவன் உறுதி அளித்தார். மேலும், முதலில் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் தான் உருவாக இருப்பதாக செல்வராகவன் கூறியுள்ளார்.

இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். சமீபகாலமாக தனுஷ் தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் மீது தனுஷ் முழு நம்பிக்கை வைத்துள்ளார்.

மேலும் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் வாத்தி படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இதே கூட்டணியில் மீண்டும் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.