தயாரிப்பாளராக கெத்து காட்டும் கமல்.. 500 கோடி பட்ஜெட், 3 ஹீரோக்களால் அரண்டு போன லைக்கா

ஆல் ரவுண்டராக கலக்கி வரும் கமல் புதுப்புது பரிமாணங்களுடன் ஒவ்வொரு நாளும் ரசிகர்களை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதில் அவர் இப்போது தயாரிப்பாளராக எடுத்துள்ள அவதாரம் தான் பலரையும் மிரள வைத்துள்ளது. பல வருடங்களாக இவர் படங்களை தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

ஆனால் இப்போது அவர் முழுமூச்சாக பட தயாரிப்பில் இறக்கியுள்ளது பல பெரிய நிறுவனங்களையும் கொஞ்சம் அசைத்து தான் பார்த்துள்ளது. அதிலும் இப்போது லைக்கா நிறுவனம் தான் தயாரிப்பில் கொடி கட்டி பறந்து வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் மாஸ் காட்டிய நிறுவனங்களை எல்லாம் ஓரங்கட்டி வரும் லைக்கா உச்ச நடிகர்களை வளைத்து போட்டு பிசினஸ் செய்து வருகிறது.

அந்த வகையில் அஜித்தின் விடா முயற்சி, கமலின் இந்தியன் 2, ரஜினி சிறப்பு தோற்றத்தில் வரும் லால் சலாம் ஆகிய படங்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. அதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார், ஜெய்பீம் ஞானவேல் கூட்டணி படமும் உருவாக இருக்கிறது. இப்படி 1000 கோடி முதலீட்டில் படங்களை தயாரித்து வருகிறது லைக்கா.

ஆனால் அதை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு கமல் இப்போது கிடு கிடுவென தன் தயாரிப்பு வேலைகளை நடத்தி வருகிறார். அதன் அடிப்படையில் சிவகார்த்திகேயனை வைத்து இவர் தயாரித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இப்போது ஜோராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை தொடர்ந்து சிம்புவின் படமும் விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அது மட்டுமின்றி அடுத்ததாக தனுசையும் கமல் வளைத்துப் போட்டுள்ளார்.

தற்போது கேப்டன் மில்லரில் பிஸியாக இருக்கும் அவர் அடுத்ததாக ராஜ்கமல் நிறுவனத்திற்காக படம் பண்ண இருக்கிறார் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். தற்போது சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தை இயக்கியுள்ள அவர் அடுத்ததாக அவரின் முன்னாள் மருமகனையும் இயக்க இருக்கிறார். இதுதான் இப்போது கோலிவுட்டின் பரபரப்பு செய்தியாக இருக்கிறது.

அந்த வகையில் கமல் இந்த மூன்று மாஸ் ஹீரோக்களின் படங்களுக்காக 500 கோடி பட்ஜெட்டை ஒதுக்கி இருக்கிறாராம். அப்படி பார்த்தால் முதல் இடத்தில் இருக்கும் லைக்காவையே இன்னும் சில நாட்களில் கமல் பின்னுக்கு தள்ளி விடுவார் என்று தான் தோன்றுகிறது. மேலும் தற்போது நம்பர் ஒன் நடிகர்களை தன் பக்கம் இழுத்து வரும் கமல் ஒரு தயாரிப்பாளராக கெத்து காட்டி நிற்பது குறிப்பிடத்தக்கது.