தமிழ் சினிமாவில் பல காலமாக உள்ள பிரச்சனை என்னவென்றால் முதல் படத்தில் வெற்றியை கொடுக்கும் இயக்குனர்கள் அடுத்தடுத்து தரமான படங்களை கொடுக்க முடியாமல் போவதுதான். அந்த வகையில் சீரியல் இயக்குனராக இருந்து தமிழ் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் தான் திருமுருகன்.
அந்த காலகட்டத்தில் பக்கத்து வீட்டு பையன் போல் அனைவர் மனதிலும் இடம் பிடித்த பரத்தை வைத்து எம்டன் மகன் எனும் படத்தை இயக்கினார். சில சர்ச்சைகளுக்கு பிறகு எம் மகன் என பெயர் மாற்றப்பட்டு படம் வெளியானது. முக்கியமான கதாபாத்திரத்தில் நாசர், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் குறிப்பாக நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிகள் சிரிப்பு வெடியாக இருக்கும்.
நாசர் மற்றும் வடிவேலு ஆகிய இருவருக்கும் இடையேயான காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனாலேயே அந்த படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
வருங்காலத்தில் திருமுருகன் மிகப் பெரிய இயக்குனராக வலம் வருவார் என பேச்சுக்கள் எழுந்த நிலையில் மீண்டும் அவசரஅவசரமாக பரத்தை வைத்து முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்னும் விளங்காத படத்தை எடுத்தார்.
வடிவேலுவின் காமெடி காட்சிகள் சிறப்பாக அமைந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அவ்வளவு மட்டமான படம். அந்த ஒரு படத்தின் தோல்வியால் இனி சினிமா நமக்கு சரிபட்டு வராது என ஏன் முடிவு எடுத்தார்? என்பது இன்னும் கேள்விக் குறிதான்.
ஒருவேளை இன்னொரு படம் எடுத்துப் பார்க்கலாம் என எடுத்து ஹிட்டாகி இருந்தால் இன்று திருமுருகன் நல்ல ஒரு கமர்ஷியல் பட இயக்குனராக வலம் வந்திருப்பார். இப்போதும் சன் டிவியில் தொடர்ந்து சீரியல்கள் இயக்கிக் கொண்டு தான் இருக்கிறார்.
இன்று டிவியில் என் மகன் படத்தை ஒளிபரப்பினால் அந்த படத்தை பார்க்க மொத்த குடும்பமே ரெடியாக தான் இருக்கிறது. இன்றும் பொம்பள சோக்கு கேக்குதோ என்ற வசனம் இடம்பெறும் எத்தனை மீம்ஸ்களை பார்க்கிறோம்.
மொத்த குடும்பமும் ரசிக்கும்படி திரைப்படம் எடுக்கும் திறமை சில இயக்குனர்களுக்கு தான் இருக்கிறது. எம்டன் மகன் படத்தை திருமுருகன் தான் எடுத்தார் என்று சொன்னால் இன்றும் நம்ப மாட்டார்கள்.