ஏ ஆர் கே சரவணன் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதையாக உருவாகி இருக்கும் வீரன் படம் இன்று வெளியாகி இருக்கிறது. ஹிப் ஹாப் ஆதி, ஆதிரா, முனிஷ்காந்த், வினய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் தங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தற்போது கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் படம் எப்படி இருக்கிறது என்பதை சிறு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.
கதைப்படி வீரானூர் என்ற கிராமத்தில் இருக்கும் குமரன் என்ற சிறுவனை மின்னல் தாக்கி விடுகிறது. அதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச் செல்லும் அந்தப் பையன் பல வருடங்களுக்குப் பிறகு இளைஞனாக தன் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார். அப்போது தன்னுடைய ஊருக்கு நடக்க இருக்கும் மிகப்பெரிய அழிவை இவர் தனக்கு கிடைத்த விசேஷ சக்தியின் மூலம் எப்படி தடுக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.
Also read: சூப்பர் ஹீரோவாக ஹிப் ஹாப் ஆதி.. வீரன் படம் கை கொடுத்ததா.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
குமரனாக வரும் ஆதி மின்னல் தாக்கியதன் விளைவாக புது சக்தி ஒன்றை பெறுகிறார். அதாவது அடுத்தவர் மூளைக்குள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து அதை கட்டுப்படுத்தும் சக்தியும் அவருக்கு கிடைக்கிறது. இதை வைத்து வில்லனாக வரும் வினய்க்கு அவர் எப்படி ஆட்டம் காட்டுகிறார் என்பதை இயக்குனர் சுவாரசியமாக கொண்டு சென்றிருக்கிறார்.
அதிலும் ஊர் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் காவல் தெய்வம் பெயரை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ மேஜிக்கை இயக்குனர் காட்டி இருப்பது சிறப்பு. இவ்வாறு நகைச்சுவையும், ஆக்சனும் கலந்த பேண்டஸி படமாக வெளிவந்துள்ள இந்த வீரன் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அதிலும் கடந்த சில தோல்விகளை சந்தித்து வந்த ஆதிக்கு இப்படம் மிகப்பெரிய பலத்தை தந்திருக்கிறது.
Also read: ஸ்பைடர் மேனாக மாறிய ஹிப் ஹாப் ஆதி.. ட்ரெண்டாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இதன் மூலம் அவர் தன்னுடைய நடிப்பிலும் மெருகேறி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தேவையில்லாத அலட்டல், ஹீரோயிசம் இல்லாமல் இயல்பாக அவர் நடித்திருப்பதே படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. மேலும் ரசிக்க வைத்த நகைச்சுவை காட்சிகளும் கதையோடு நம்மை ஒன்ற வைத்து விடுகிறது. மேலும் கதையோடு பயணிக்கும் பின்னணி இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
இப்படி பல நிறைகள் இருந்தாலும் வில்லன் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் பவராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைக்காமல் இருக்க முடியவில்லை. மற்றபடி குறை சொல்ல முடியாத ஒரு படமாக தான் வீரன் இருக்கிறது. அந்த வகையில் அனைத்து தரப்பினரும் தாராளமாக ரசிக்கும் வகையில் படம் உள்ளது. ஆக மொத்தம் இந்த வீரன் காவல் தெய்வம் என்ற சூப்பர் ஹீரோவாக மனதில் நிற்கிறார்.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3.5/5