தயாரிப்பாளர்கள் படும் அவமானம்.. ஹீரோக்களும், இயக்குனர்களும் செய்யும் கீழ்த்தரமான வேலை

அந்த காலத்தில் எல்லாம் இயக்குனர்களும், ஹீரோக்களும் தயாரிப்பாளர்களுக்கு அப்படி ஒரு மரியாதை கொடுப்பார்களாம். முன்னணியில் இருக்கும் பெரிய ஹீரோக்கள் கூட தயாரிப்பாளர்களை முதலாளி என்று மரியாதையுடன் அழைத்த காலமும் இருக்கிறது. தயாரிப்பாளர் படப்பிடிப்பு தளத்திற்கு வருகிறார் என்றால் ஒட்டுமொத்த படக்குழுவும் ஒருவித பதட்டத்துடன் தான் இருப்பார்கள்.

ஆனால் இன்றைய சினிமா துறையில் தயாரிப்பாளர்களுக்கு அப்படி எந்தவித மரியாதையும் கிடைப்பதில்லை. அங்கு ஹீரோக்கள் வைப்பது தான் சட்டம். அவர்கள் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது. ஏகப்பட்ட பணத்தை போட்டு படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு படத்தில் கருத்து சொல்வதற்கு கூட இப்போது உரிமை இல்லாமல் போய்விட்டது.

ஏனென்றால் இயக்குனர்களே இப்போது ஹீரோக்களிடம் நேரிடையாக அனைத்தையும் பேசி முடித்து விடுகிறார்கள். அது மட்டுமல்லாமல் எந்த ஹீரோயினை போட வேண்டும், எங்கு சூட்டிங் நடத்த வேண்டும் என்பது போன்ற அனைத்து விஷயங்களையும் ஹீரோதான் முடிவு செய்கிறார்.

ஹீரோவுக்கு பிடித்த இயக்குனராக இருந்தால் தயாரிப்பாளர்களின் பாடு இன்னும் திண்டாட்டம் தான். எங்களால்தான் பெரிய ஹீரோவின் கால்ஷீட் உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று கர்வத்துடன் ஆடும் இயக்குனர்களும் இருக்கிறார்கள்.

இதனால் பல தயாரிப்பு நிறுவனங்கள் இப்போது படம் தயாரிக்கவே தயங்குகிறது. இதற்கு ஹீரோக்கள் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளமும் ஒரு காரணம். படம் வெற்றியோ, தோல்வியோ ஹீரோக்களுக்கு சம்பளம் கொடுத்து விட வேண்டும். தயாரிப்பாளரின் நஷ்டத்தை பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.

மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகையும் தற்போது அதிகமாக இருப்பதால் பழம் பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் கூட சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டது. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்கள் ஹீரோக்களால் படாத பாடு பட்டு வருகின்றனர்.