புல்லரிக்க வைத்த 5 ஹீரோயின் கதாபாத்திரங்கள்.. எதிர்பார்ப்பை கிளப்பிய அருவி படத்தின் 2ம் பாகம்!

பொதுவாக சினிமாவை பொறுத்தவரையில் ஹீரோவுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும் வகையில் படங்கள் எடுக்கப்படும். அதில் ஹீரோயின்கள் வெறும் பாடலுக்கு மட்டுமே வந்து செல்லும்படி கதை அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் சமீப காலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்கள் அதிக அளவில் வர தொடங்கிவிட்டது. அந்த வகையில் நம்மை புல்லரிக்க வைத்த 5 ஹீரோயின் கேரக்டர்கள் பற்றி இங்கு காண்போம்.

புதுமைப்பெண்: பாரதிராஜா இயக்கத்தில் பாண்டியன், ரேவதி நடிப்பில் கடந்த 1984 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. பிராமண பெண்ணான ரேவதி, பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொள்வார். ஒரு கட்டத்தில் பாண்டியன் கொலை குற்றத்திற்காக கைது செய்யப்படுவார். அவரை கஷ்டப்பட்டு சிறையில் இருந்து மீட்டுக் கொண்டு வரும் ரேவதியின் மீது நடத்தை சரியில்லாதவள் என்ற பழி விழும்.

இதை ஏற்க முடியாத அவர் தன் மீது பழி சுமத்தியவர்களை கேள்விகளால் துளைத்தெடுப்பார். மேலும் படி தாண்டினாலும் பத்தினி பத்தினி தான் என்று புதுமை பெண்ணாக மாறுவார். ரசிகர்களை வியக்க வைத்த இந்த சீதா என்ற கேரக்டர் ரேவதிக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தியது. இப்போது வரை இப்படம் அந்த கால ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இருக்கிறது.

அருந்ததி: அனுஷ்கா நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மிகப்பெரிய சமஸ்தானத்தின் வாரிசான அருந்ததி பிரேத ஆத்மாவான பசுபதியை அழிப்பதற்காக தன் உயிரையே கொடுப்பார். அதை தொடர்ந்து மறுபிறவி எடுக்கும் அவர் எப்படி அந்த ஆத்மாவை வதம் செய்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. அதில் அருந்ததி என்னும் ஜக்கம்மாவாக அனுஷ்கா மிரள விட்டிருப்பார். இன்று வரை ரசிகர்களை புல்லரிக்க வைத்த கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று.

அறம்: கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழும் குழந்தையை கலெக்டரான மதிவதனி எவ்வளவு ரிஸ்க் எடுத்து காப்பாற்றுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. அதில் நயன்தாராவின் மிடுக்கான தோற்றமும், நடிப்பும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இந்த படம் அவரின் திரை வாழ்வில் இன்று வரை ஒரு முக்கிய படமாக இருக்கிறது.

அருவி: அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் வெளிவந்த இந்த படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. அருவி என்ற ஒரு பெண் சமுதாயத்தால் எந்த அளவுக்கு வேதனைப்படுகிறார் என்பதையும் அதை எப்படி துணிந்து எதிர்கொள்கிறார் என்பதையும் இப்படம் தெளிவாக காட்டியது. அப்படி ஒரு கதாபாத்திரத்தில் அறிமுக நாயகியாக நடித்த அதிதி பாலன் பலரையும் வியக்க வைத்தார். அது மட்டுமல்லாமல் இப்படம் 2ம் பாகம் வெளிவருமா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

செம்பி: பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த இந்த திரைப்படத்தில் கோவை சரளா வீரத்தாயி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவர் நடித்தார் என்று சொல்வதை காட்டிலும் வாழ்ந்தார் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு அவர் சில வக்கிர புத்தி மனிதர்களால் பாதிக்கப்படும் தன் பேத்திக்காக போராடும் ஒரு கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். இதன் மூலம் நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்ற விமர்சனமும் கோவை சரளாவுக்கு கிடைத்தது. அப்படிப்பட்ட இப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளமாகவும் அமைந்திருக்கிறது.