Are You Ok Baby Trailer: பல தரமான கதைகளை கொடுத்து தன்னை ஒரு இயக்குனராகவும் நிரூபித்திருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ஆர் யூ ஓகே பேபி படம் தயாராகியுள்ளது. கிட்டத்தட்ட 4 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களமிறங்கியுள்ள இவருடைய இப்படைப்பின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
படத்தின் டைட்டிலை பார்த்ததுமே அனைவருக்கும் தெரிந்திருக்கும் இது ஒரு குழந்தையை மையப்படுத்திய கதை என்று. அதன் படி ஆரம்பத்திலேயே அன்யா என்ற குட்டி தேவதையின் அறிமுகத்துடன் ட்ரெய்லர் ஆரம்பிக்கிறது.
அதில் சமுத்திரகனி, அபிராமி தங்கள் குழந்தையை பாராட்டி சீராட்டி வளர்ப்பதும், ஒரு கட்டத்தில் குழந்தை கையை விட்டு போனதால் தவிப்பதும் என அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து குழந்தை யாருக்கு சொந்தம் என்ற பரபரப்புடன் ட்ரெய்லர் நகர்கிறது.
இப்படியாக நீதிமன்றம், வழக்கு, மீடியா என செல்லும் இந்த பிரச்சனையில் லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்லாததும் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பஞ்சாயத்து செய்யும் படியாக காட்டப்படுகிறது. இதிலிருந்தே இரு தாய்மார்களின் பாசப் போராட்டம் தான் இப்படத்தின் கதை என்று தெரிகிறது.
அதை தொடர்ந்து குழந்தை யாரிடம் வளரப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் இந்த ட்ரெய்லர் முடிகிறது. வரும் செப்டம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் எந்த அளவுக்கு ரசிகர்களை கவரும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.