தமிழிலும், தெலுங்கிலும் வெள்ளிவிழா கண்ட ஒரே படம்.. 80 களில் இயக்குனர்களை அலற விட்ட பாக்கியராஜ்

80ஸ் என்பது ரஜினியும், கமலஹாசனும் ஒரு சேர கோலிவுட்டை ஆட்சி செய்த காலம் என்றே சொல்லலாம். மாஸ் காட்சிகள், பன்ச் டயலாக்குகள் என தியேட்டரை தெறிக்க விட்டு கொண்டிருந்த போது, குடும்ப கதைகள், பெண்களின் சாம்ராஜ்யம் என சத்தமே இல்லமால் தமிழ் ரசிகர்களின் இதயங்களில் வந்து அமர்ந்தவர் தான் பாக்யராஜ்.

பாக்கியராஜ் திரைக்கதைகளின் கிங் என்றே சொல்வார்கள். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனராக மாறிய பாக்யராஜ், கதாநாயகனாக மாறியது அவரே எதிர்பார்க்காத ஒன்று. அவருடைய கதைகளில் பெண்கள் அதிகமாகவே கோலோச்சி இருந்தார்கள் என்றே சொல்லலாம்.

1979 ஆம் ஆண்டு சுவர் இல்லாத சித்திரங்கள், 1981 ஆம் ஆண்டு அந்த ஏழு நாட்களுக்கு பிறகு 83 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் முந்தானை முடிச்சு. முந்தானை முடிச்சு தமிழ் சினிமாவின் ஊர்வசியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியதோடு, முருங்கைக்காய் லாஜிக்கையும் அறிமுகப்படுத்தியது. இன்றுவரை இந்த முருங்கைக்காய் டிப்ஸ் தமிழ் படங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

AVM ப்ரொடக்சன் தயாரிப்பில், இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்து, ஊர்வசி, தவக்களை , கோவை சரளா என பலரும் இணைந்த திரைப்படம் தான் முந்தானை முடிச்சு. மனைவி இறந்த ஆசிரியர், கை குழந்தையுடன் ஒரு கிராமத்திற்கு வேலைக்கு வந்து அங்கே ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்யும் இக்கட்டான சூழ்நிலை, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்ட கதை. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.

முந்தானை முடிச்சு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 25 வாரங்கள் வரை திரையில் ஓடி வெள்ளிவிழா கண்டது. பாக்ஸ் ஆபிசில் அந்த ஆண்டுக்கான மிகப்பெரிய வசூலை அள்ளிய படம் என்றால் அது இந்த படம் தான். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் தெலுங்கில் மூடு முல்லு , இந்தியில் மாஸ்டர்ஜி , கன்னடத்தில் ஹல்லி மேஷ்ட்ரு என ரீமேக் செய்யப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாயும் புலி, உலக நாயகன் கமலஹாசனின் தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படங்களுக்கு நடுவே பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரையிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியையும் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.